×

2 ஆண்டுகளுக்கு பிறகு அக்.16 தேதி முதல் சேலத்திலிருந்து மீண்டும் விமான சேவை: பெங்களூரு — சேலம் — கொச்சின் வழித்தடத்தில் இயக்கம்

சேலம்: சேலத்தில் இருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 16ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. முதற்கட்டமாக பெங்களூரு-சேலம்-கொச்சின் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காமலாபுரத்தில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. சேலத்தில் இருந்து சென்னைக்கு, கடந்த 2018ம் ஆண்டு உதான் திட்டத்தின் கீழ் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து தினசரி விமான சேவையை ட்ரூஜெட் நிறுவனம் வழங்கி வந்தது. இதனால், நாள்தோறும் சேலத்தை சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் பலர் இச்சேவையை பயன்படுத்தி வந்தனர்.

இதனிடையே கொரோனா, 3 ஆண்டு ஒப்பந்த காலம் முடிவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால், பல்வேறு தரப்பினர் சிரமமடைந்தனர். இதனையடுத்து, சேலத்தில் இருந்து மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என, சேலம் எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் அடிக்கடி கேள்வி எழுப்பியதுடன், ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதங்களை வழங்கினார்.

இதனையடுத்து, உதான்-5 திட்டத்தின் கீழ் சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு மீண்டும் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இச்சேவையை வழங்க, அலையன்ஸ் ஏர் மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூர்-சேலம்-கொச்சின் வழித்தடத்தில் விமானம் இயக்கப்பட உள்ளது. தொடர்ந்து, கொச்சின்-சேலம்-பெங்களூர் வழித்தடத்தில் மறுமார்க்கமாக இயக்கப்படும்.

இதேபோல், அக்டோபர் மாத இறுதியில் இன்டிகோ நிறுவனம் சார்பில் பெங்களூர்-சேலம்- ஐதராபாத் வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்படுகிறது. தொடர்ந்து, ஐதராபாத்-சேலம்-பெங்களூர் வழித்தடத்தில் விமானம் இயக்கப்படும் என எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் இருந்து மீண்டும் பயணிகள் விமான சேவை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவையை தொடங்குவதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. வரும் 16ம் தேதி நடக்கும் தொடக்க விழாவில் ஒன்றிய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post 2 ஆண்டுகளுக்கு பிறகு அக்.16 தேதி முதல் சேலத்திலிருந்து மீண்டும் விமான சேவை: பெங்களூரு — சேலம் — கொச்சின் வழித்தடத்தில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Bengaluru ,Cochin ,Dinakaran ,
× RELATED ஆபாச வீடியோ அனுப்பி மனைவியை...